தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 260 வழக்குகளுக்கு தீர்வு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 260 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-08-12 18:45 GMT

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 260 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத் நிகழ்ச்சி) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார். முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஷ்வரன், நீதித்துறை நடுவர் நீதிபதி பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி விஜயா பேசியதாவது:-

லோக் அதாலத் நிகழ்வில் தீர்வு காணப்படும் வழக்குகளில் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது. இதில் இருதரப்பினருக்கும் வெற்றி தோல்வி என்ற பாகுபாடு நிலை ஏற்படாது.

இருதரப்பினருக்கும் கோர்ட்டு கட்டணம் திருப்பி தரப்படும். சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகளை இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் பேசி சமரச தீர்வு கண்டு கொள்ளலாம். இதற்கு வக்கீல்கள் முன்வர வேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் பேசினால் தீர்வு ஏற்படும் என்பதை இந்த லோக் அதாலத் நிகழ்வு மூலம் காணலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

260 வழக்குகளுக்கு தீர்வு

நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்ற இந்த லோக் அதாலத் நிகழ்வில் மொத்தம் 260 வழக்குகள் எடுத்துக்கொண்டு சமரச தீர்வு காணப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.2 கோடியே 9 லட்சத்து 27 ஆயிரத்து 363 மதிப்பில் தீர்வாக அறிவிக்கப்பட்டது. நிகழ்வில் வக்கீல் சங்க தலைவர் சேக்இப்ராகிம் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ விவாகரத்து கேட்டு மனு செய்து வழக்கு நடந்து வந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சமரசம் செய்து கொண்டு மீண்டும் சேர்ந்து வாழ்வதாக கூறி இணைந்து வாழ்க்கையை தொடர சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்