போலீஸ் நிலையங்களில் தீர்வு காணாதபுகார் மனுக்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் விசாரணைஉரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் தீர்வு காணாத புகார் மனுக்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Update: 2022-12-21 18:45 GMT


தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் தீர்வு காணாத புகார் மனுக்கள் மீது அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இரு தரப்பினர் மற்றும் விசாரணை அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி, உரிய தீர்வு காண வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணாத மனுக்கள் சம்பந்தமாக மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் மற்றும் விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகளை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

15 மனுக்கள்

அப்போது சொத்து சம்பந்தமான 7 மனுக்கள், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக 5 மனுக்கள், வாய்த் தகராறு காரணமாக 2 மனுக்கள். விசாரணை வழக்கில் கூடுதல் சட்ட பிரிவை சேர்க்க வேண்டும் என மொத்தம் 15 புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.

விசாரணையில், மோசடி தொடர்பான புகார் மனுக்கள் மீது உடனடியாக எதிர் மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும், 2 மனுக்கள் மீது வருவாய் துறையினர் விசாரணை மேற்கொள்ளவும், பெற்ற தாயை கவனித்து கொள்ளாத மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தந்தை மகனுக்கு சொத்தை எழுதி வைத்த பிறகு, மகன் கவனிக்காத நிலையில் மீண்டும் தந்தைக்கு நிலத்தை எழுதிக் கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விசாரணை போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

விசாரணையின்போது, விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கரிகால் பாரி சங்கர், விஜிகுமார், ஸ்ரீதரன், ராஜேந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்