தமிழக-கர்நாடக எல்லையில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைப்பு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு
தீவிர கண்காணிப்பு
மங்களூருவில் ஆட்டோவில குக்கர் குண்டு வெடித்ததை தொடர்ந்து தமிழக-கர்நாடக எல்லையில் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கண்காணிப்பு
கர்நாடக மாநிலம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதைத்தொடர்ந்து கர்நாடகா மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தமிழக-கர்நாடக எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும் கொடுமுடி நொய்யல் சோதனை சாவடி, தாளவாடி, பண்ணாரி, கருங்கல்பாளையம், விஜயமங்கலம், பர்கூர், லட்சுமிநகர் ஆகியவை உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ள 12 சோதனைசாவடிகளிலும் போலீசார் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்கின்றனர். முழுவதுமாக சோதனை செய்த பின்னர்தான் தமிழகத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.
பர்கூர்
மேலும் பர்கூர் மலைப்பகுதியில் தட்டகரை, கர்காகண்டி பள்ளம் அருகே வனத்துறை சார்பிலும், போலீஸ் சார்பிலும் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு 24 மணி நேரமும் போலீசார், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களும் கேமரா மூலம் படம் பிடிக்கப்படுகிறது. மேலும் வாகன எண்களை பதிவு செய்து கொண்டு விசாரணைக்கு பின்னர் தான் தமிழ்நாட்டுக்குள் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கிறார்கள்.