ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் வலியுறுத்தல்

ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் வலியுறுத்தல்

Update: 2022-09-30 14:05 GMT

பல்லடம்

பல்லடம், அரசு பள்ளி கட்டடப் பணிகள் தாமதம், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் வலியுறுத்தல். பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரான கூட்டம் ஒன்றிய தலைவர் தேன்மொழி தலைமையில் ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துகொண்டு ஒன்றிய குழு உறுப்பினர் ரவி (மதிமுக) பேசுகையில்: கரைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டடங்கள் சீரமைப்பு பணி 90 நாட்களில் முடிக்கப்படவேண்டும். 90 நாட்களில்சீரமைப்பு பணி முடிப்பதாக கூறி வேலை எடுத்த ஒப்பந்ததாரர் 9 மாதம் ஆகியும் இன்னும் பணியை முடிக்கவில்லை. அவருக்கு புதியதாக எந்த வேலையும் கொடுக்கக்கூடாது.மேலும் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதனால் அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கல்வி பாதிப்படைந்துள்ளது. அருள்புரம் முதல் உப்பிலிபாளையம் வரையிலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதற்காக அந்த சாலையில் சர்வே செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துமனையில் காலியாக உள்ள சமையலர், தூய்மை பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மங்கையர்கரசி (அதிமுக) : பருவாய், காரணம்பேட்டை பகுதியில் கல்குவாரி தொழில் நிறுவனங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் நல்ல வருமாணம் கிடைத்து வருவதால் அந்த பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தடுத்து நிறுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலசுப்பிரமணியம் (துணைத்தலைவர்) : அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை புதுப்பித்து கிராம மக்கள் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் இரண்டரை கோடி ரூபாயில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்க தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் கரைப்புதூர் ஊராட்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை அழைக்காமல் அரசின் திட்டப்பணியை பல்லடம் எம்.எல், ஏ.வை வைத்து ஊராட்சி நிர்வாகத்தினர் பூமி பூஜை போடப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இனி மேல் அரசு பணிகளுக்கு பூமி பூஜை நடத்துவதாக இருந்தால் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை அழைத்து தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அதே போல் அரசு துறை சார்ந்த முகாம், கூட்டம் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு அழைப்பு கொடுத்து நடத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.பின்னர் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளி கட்டடங்களில் பழுதுகளை நீக்கவும், பழைய கட்டடங்களை இடிக்கவும், வர்ணம் அடிக்கவும் ஒன்றிய பொதுநிதியிலிருந்து மேற்கொள்ள முடிவு செய்தல் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

---

Tags:    

மேலும் செய்திகள்