புதிய வாக்காளர்களை சேர்க்க தீவிர கவனம் செலுத்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைமை அறிவுறுத்தல்

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியின்போது புதிய வாக்காளர்களை சேர்க்க தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகளுக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2023-10-01 18:33 GMT

சென்னை,

1.1.2024-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

27-ந் தேதி முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனு அளிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இந்த பணிகளில் தி.மு.க. மாவட்ட, மாநகர செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என தி.மு.க. தலைமைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

தீவிர கவனம்

இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும் - வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாத பெயர்களையும் - புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கும் நாட்களில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழகம், வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

சிறப்பு அக்கறை

மாவட்ட, மாநகர செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கழக அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பணி குறித்து நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமை கழகத்துக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்