திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை அமைக்க தீவிர நடவடிக்கை -அமைச்சர் தகவல்

திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Update: 2023-06-21 22:16 GMT

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் மற்றும் பெருந்திட்ட பணிகள் (மாஸ்டர் பிளான்) குறித்து வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்தது.

இதில் சிறப்பு பணி அதிகாரி குமரகுருபரன், கமிஷனர் முரளிதரன், கூடுதல் கமிஷனர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா, கவிதா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

மாற்று மலைப்பாதை

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள 15 புகழ்பெற்ற கோவில்களில் பெருந்திட்ட பணிகளின் கீழ் ரூ.1,360.80 கோடி மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.68 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 2 ஆண்டு காலத்துக்குள் இப்பணிகளை நிறைவு செய்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்று மலைப் பாதை அமைப்பதற்கு வனத்துறைக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம், 20 தனிநபர்களுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம், கோவிலுக்குச் சொந்தமான 2.10 ஏக்கர் நிலம் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டு, அதற்குண்டான அனுமதி பெறுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த கோவில் ராஜகோபுர இணைப்புப் பாதை, புதிதாக கட்டப்படுகின்ற 5 திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டிடம், யானை மண்டபம், மலைப் பாதை நிழல் மண்டபங்களின் கட்டுமான பணிகள், தங்கும் விடுதிகளை புனரமைக்கும் பணிகள், புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி, திருக்குளங்களை அழகுப்படுத்தும் பணி ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

70 சதவீத பணிகள் நிறைவு

பேட்டியின்போது, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீசுவரர் கோவில் திருக்குளத்திற்கு சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழைநீர் சென்று சேரும் வகையில் நடைபெற்று வரும் கட்டமைப்பு பணிகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ''அந்த பணிகள் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டமைப்பு பணிகளில் 70 சதவீத பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன'', என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்