சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சப்பந்தோடு-பூதமூலா சாலையை சீரமைக்கக்கோரி சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-28 20:15 GMT

பந்தலூர்

சப்பந்தோடு-பூதமூலா சாலையை சீரமைக்கக்கோரி சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பழுதான சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அருகே உள்ள சப்பந்தோடு மற்றும் பூதமூலா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்கு சப்பந்தோடு பகுதியில் இருந்து பூதமூலா பகுதிக்கு செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் சப்பந்தோடு பகுதியில் இருந்து பூதமூலா செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நின்று விடுகிறது. இதனால் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, பயன்படுத்த முடியாத நிலையில் சாலை உள்ளதால் நோயாளிகள், கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை உள்ளது. மேலும் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. வனவிலங்குகள் துரத்தினால் கூட விரைவாக தப்பித்து ஓட முடியவில்லை என்றனர். இதையடுத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், ஊராட்சி செயலாளர் சஜீத் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சாலை அமைக்க உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்