செப்டம்பர் 30-ந்தேதிதலைமை செயலகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம்ஈரோட்டில் ஜவாஹிருல்லா பேட்டி

செப்டம்பர் 30-ந்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என ஈரோட்டில் ஜவாஹிருல்லா கூறினாா்.

Update: 2023-08-26 21:53 GMT

த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளில், நீண்ட நாள் சிறையில் இருந்து வருபவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கையை பெற்று நீண்ட நாள் சிறையில் உள்ள 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதபோது வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.

மதுரை ரெயில் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கும் நிகழ்வு. அதற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பொதுமக்கள் பாதுகாப்பாக ரெயிலில் பயணம் செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா தயாரிப்பான சந்திராயன்-3 நிலவில் கால் பதித்திருப்பது வரலாற்று சாதனை. இது ஏதோ பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் நிகழ்த்திய சாதனை போல் சித்தரிக்கப்படுகிறது. இது மோடி அரசுக்கு மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும். 1962-ம் ஆண்டு நேரு இஸ்ரோ நிறுவனத்தை உருவாக்கினார். அதன் பின்னர் பல சாதனைகளை இஸ்ரோ செய்துள்ளது. சந்திராயன்-3 இறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி, சிவசக்தி என பெயர் சூட்டியதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. பெயர் வைத்ததை விட இந்த சாதனையை பெரிதாக பார்க்க வேண்டும். தமிழர்கள் தலைமையேற்று சந்திராயன்-3 விண்கலத்தை செலுத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன், த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஏ.சித்திக், செயலாளர் லரிப், பொருளாளர் சகுபர் அலி, ம.ம.க. மாவட்ட செயலாளர் மீரான் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்