பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் இளநீரை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தனி ரெயில்-ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் இளநீரை வடமாநிலங் களுக்கு கொண்டு செல்ல தனி ரெயில் விட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் இளநீரை வடமாநிலங் களுக்கு கொண்டு செல்ல தனி ரெயில் விட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கொப்பரை தேங்காய்
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் விவசாய பிரிவு சார்பில் தேங்காய் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு உள்ள தென்னை விவசாயத்தை பாதுகாப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் தென்னை சாகுபடி குறைந்து வருவதாகவும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிகமாகி வருவதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடை, சத்துணவு மையங்களில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். இதற்காக ஒரு குழு அமைத்து தென்னை விவசாயம் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு அரசுக்கு எடுத்து செல்ல வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதலை நீட்டிக்க அரசுக்கு வலியுறுத்த வேண்டும். இன்னும் 3 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது மேலும் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இளநீர் ரெயில்
கோவை வேளாண்மை பல்கலைக்கழக மேலாண்மை குழு உறுப்பினர் சேதுபதி பேசும்போது கூறியதாவது:-
அரசு கொப்பரை தேங்காயாக விவசாயிகளிடம் இருந்து வாங்கி கொள்கிறது. ஆனால் மழைக்காலத்தில் விவசாயிகளால் கொப்பரை தேங்காயை உற்பத்தி செய்ய முடியவில்லை. நோய் தாக்குதலால் பொள்ளாச்சி பகுதியில் கடந்த 6 மாதங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. 10 ஆண்டுகளில் இந்த நோய் அதிகமாக பரவினால் பொள்ளாச்சியில் பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே தென்னை விவசாயிகள் மாற்று பயிரை பற்றி யோசிக்க வேண்டும். பொள்ளாச்சி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் இளநீரை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தனி ரெயில் விட வேண்டும். இதன் மூலம் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்து தென்னை விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அரசுக்கு எடுத்து செல்ல வேண்டும். வடமாநிலங்களில் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல ரெயில் இயக்கப்படுகிறது. ஆனால் தென்இந்தியாவில் இருந்து ரெயில் இல்லை. எனவே இங்கும் ரெயில் இயக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் பி.ஏ.பி. திட்ட பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.