ஏற்றுமதி ரக ஏலக்காய்களுக்கு தனி ஏலம் நறுமண பொருள் வாரியம் நடவடிக்கை

ஏற்றுமதி ரக ஏலக்காய்களுக்கு தனியாக ஏலம் நடத்தப்படும் என்று நறுமண பொருள் வாரியம் அறிவித்து உள்ளது.

Update: 2022-05-29 15:11 GMT

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் அதிகளவில் விளைகிறது. இந்த ஏலக்காய் கேரளா புத்தடியிலும், தமிழ்நாடு போடியிலும் நறுமண பொருள் வாரியத்தின் இ-ஆக்சன் மையங்களில் பதிவு செய்து விற்கப்படுகிறது. வாரியத்தில் உரிமம் பெற்ற ஏலக்காய் நிறுவனங்கள், பதிவு செய்த ஏலக்காய் வியாபாரிகளிடம் இருந்து ஏலக்காயை கொள்முதல் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் காலை, மதியம் என ஒரு நாளைக்கு இரு நிறுவனங்கள் ஏலக்காய் ஏலம் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் ஏலக்காய் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமை ஏற்றுமதி ரக ஏலக்காய்களுக்கு தனியாக ஏலம் நடத்துவதாக நறுமணபொருள் வாரியம் அறிவித்துள்ளது. வாரிய ஆய்வகத்தில் சோதனை செய்து பூச்சிக்கொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவுதான் உள்ளது என்ற சான்றிதழ் பெற்ற ஏலக்காய் மட்டுமே இந்த ஏலத்தில் அனுமதிக்கப்படும். அப்போது 3 ஏலக்காய் நிறுவனங்கள் பங்கேற்கவும், அதிகபட்சமாக 50 டன் மட்டுமே விற்பனைக்கு வைக்க வேண்டும் எனவும், ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 25 டன் வரை கொண்டு வரலாம் எனவும் நறுமண பொருள் வாரியம் தெரிவித்து உள்ளது.

வாரியத்தின் இந்த நடவடிக்கையால் இந்திய ஏலக்காய்களுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் நிறைய கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும் என ஏலக்காய் விவசாயிகள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்