அமலாக்கத்துறையின் 3,000 பக்க வழக்கு ஆவணங்களை கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி
அமலாக்கத்துறையின் 3,000 பக்க வழக்கு ஆவணங்களை கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
3 ஆயிரம் பக்க ஆவணங்கள்
அதன்படி, செந்தில் பாலாஜியை கடந்த 7-ந் தேதி இரவு முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறை காவல் முடிந்து 12-ந் தேதி சென்னை செசன்சு கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜிக்கு எதிராக 3 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான வழக்கு ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கோர்ட்டில் தாக்கல் செய்தது.
மனு தள்ளுபடி
இதன்பின்பு செந்தில் பாலாஜியை 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட கைது குறிப்பாணை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நடந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த மனு மீதான கோரிக்கையை வலியுறுத்த விரும்பவில்லை என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.