'செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' எடப்பாடி பழனிசாமி பேட்டி

அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-14 22:50 GMT

திருவேற்காடு,

திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:- அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு இப்போது நடந்தது அல்ல. தொடர் நடவடிக்கையாக நடந்து வந்தது.

செந்தில் பாலாஜியை உத்தமர் போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். வேண்டுமென்றே அமலாக்கதுறையும், வருமான வரித்துறையும் சோதனை நடத்துவதாக கூறி வருகிறார்.

ராஜினாமா செய்ய வேண்டும்

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசுவது ஒன்றும், தற்போது ஆளுங்கட்சி முதல்-அமைச்சராக இருந்து கொண்டு பேசுவது வேறு விதமாகவும் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டு வருகிறார். 30 ஆயிரம் கோடி ஊழல் குறித்து செந்தில்பாலாஜி ஏதாவது பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் ஆஸ்பத்திரிக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தனர். செந்தில்பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாலும், அமலாக்கத்துறை கைது செய்து இருப்பதாலும் அவர் தார்மீக பொறுப்பு ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். டாஸ்மாக்கில் 6 ஆயிரம் கடைகள் உள்ளது. அதில் 4 ஆயிரம் கடைக்கு இதுவரை டெண்டர் விடப்படவில்லை. முறைகேடாக 2 ஆண்டு காலமாக பார்கள் செயல்பட்டு வருகிறது. அரசுக்கு வர வேண்டிய வருவாய் தி.மு.க.வுக்கு சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்