சேந்தமங்கலத்தில் நலிவடைந்து வரும்கருப்பு மண்ணில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் தொழில் ஜொலிக்குமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

Update: 2023-01-25 18:45 GMT

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் பகுதியில் கருப்பு மண்ணில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் தொழில் நலிவடைந்து வருவதால், அதனை ஜொலிக்க வைக்க அரசு உதவ வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தங்கம் பிரித்தெடுக்கும் தொழில்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தொழில் சிறந்து விளங்கும். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி மற்றும் லாரி தொழில் முன்னணி வகித்தாலும், சமீப காலமாக சேந்தமங்கலம் பகுதியில் கருப்பு மண்ணில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் தொழில் ஜரூராக நடந்து வந்தது.

சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில், நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், சோமேஸ்வரர் கோவில்கள் உள்ளன. இந்த ஊரின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்தாலும், சமீபகாலமாக கருப்பு மண்ணில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் தொழில் நடந்து வருவதால், இந்த ஊருக்கு அது மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

அரசு உதவ வேண்டும்

தொடக்க காலத்தில் கதவு, ஜன்னல் போன்ற மர வேலைகளை செய்து வரும் தச்சு தொழிலாளர்களிடம் உதவியாளராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வேலை பார்த்து வந்தனர். அதை தொடர்ந்து ரெடிமேடு ஜன்னல், கதவுகள் வர தொடங்கியதால் தச்சர்கள் செய்யும் வேலை மிகவும் குறைந்தது.

இதனால் அங்கு உதவியாளராக வேலை பார்த்தவர்கள் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி சென்றனர். வெளிமாநிலங்களில் உள்ள நகைக்கடைகளில் வேலை பார்த்து வந்தனர். மேலும் சிலர் நகை தயார் செய்யும் பட்டறையில் வேலை பார்த்தனர். அப்போது தான் கருப்பு மண்ணில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பத்தை அறிந்தனர்.

இதையடுத்து சேந்தமங்கலம் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் 50-க்கும் மேற்பட்ட கருப்பு மண் அரவை ஆலைகள் இயங்கி வந்தன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து கருப்பு மண்ணை வாங்கி வரும் உரிமையாளர்கள் இங்கு பட்டறைகளை அமைத்து தங்கத்தை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். 1 டன் மண்ணில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க சுமார் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் 1 கிராம் தங்கம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. 1 டன் மண்ணிற்கு ½ பவுன் தங்கம் கிடைத்தால் மட்டுமே தொழிலை லாபகரமாக செய்ய முடியும் என கருப்பு மண் அரவை ஆலை நடத்தி வருவோர் தெரிவிக்கின்றனர்.

இந்த தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால் தொழிலாளர்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பாதிப்பு இல்லை

இதுகுறித்து சேந்தமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் கூறியதாவது:-

சேந்தமங்கலம் பகுதியில் கருப்பு மண்ணிலிருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் தொழிலில் சுமார் 3 ஆயிரம் பேர் வேலை பார்த்து வந்தனர். நாளுக்கு நாள் இந்த தொழில் நலிவடைந்த காரணத்தால் தற்போது சுமார் ஆயிரத்திற்கும் குறைவான தொழிலாளர்களே அதில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இந்த தொழிலாளர்களை பாதுகாக்க நல வாரியம் அமைத்து அவர்களுக்கு அரசு உதவ ஏற்பாடு செய்ய வேண்டும். கருப்பு மண் அரவை ஆலைகளால் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு மண் அரவை மில்லில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை ஆய்வுக்கு கூட அதிகாரிகள் எடுத்து சென்று ஆய்வறிக்கை அனுப்பி உள்ளனர். இதனால் அதன் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கோ, விவசாயத்திற்கோ பாதிப்பு ஏதும் வராது.

வேலைவாய்ப்பு இல்லை

சேந்தமங்கலத்தை சேர்ந்த பாஸ்கர்:-

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மோதிரம், செயின், தாலிக்கொடி போன்ற தங்க அணிகலன்கள் மனித உழைப்பால் செய்யப்பட்டு வந்தன. இதனால் நகைகளில் இருந்து சேதாரம் சிறிதளவு அவர்களுக்கு கிடைத்து வந்தது. அதன் மூலம் ஓரளவு லாபமும் பார்த்தனர்.

காலம் மாறியதன் காரணமாக நகைகள் எந்திரத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனால் நகை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக கருப்பு மண்ணில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் தொழில் கைக்கொடுத்து வருகிறது. இருப்பினும் மிகவும் குறைவான வருவாய் மட்டுமே கிடைப்பதால், அரசு உதவிட வேண்டும்.

குறைவான சம்பளம்

பெண் தொழிலாளி செல்லம்மாள்:-

தொடக்க காலத்தில் கருப்பு மண்ணில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.100 மட்டுமே கூலியாக கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.250 முதல் ரூ.300 வரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள விலைவாசி உயர்வில் இந்த கூலியை வைத்து சமாளித்து வருகிறோம்.

இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து கருப்புமண் லோடு கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருவதால், தொடர்ச்சியாக எங்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. கருப்புமண்ணை பெரிய வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்றுவிடுவதால் லோடு கிடைப்பதில் சிக்கல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அரசு இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்