2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இங்கிலாந்து கடத்தல்காரர் மேல்முறையீட்டு மனு மீது வெள்ளிக்கிழமை தீர்ப்பு

தூத்துக்குடியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரர் ஜோனதன் தோர்னுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Update: 2023-07-06 18:45 GMT

கடத்தல்காரர்

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (வயது 47) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி மடக்கி பிடித்தனர். அவர் மும்பையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இவர் 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜோனாதன் தோர்ன் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்றுள்ளார். இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோனதன் தோர்னை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு

தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஜோனதன் தோர்னுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இதனை எதிர்த்து ஜோனதன் தோர்ன் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக பட்டியலிடப்பட்டு உள்ளது.

திறக்கப்படாத செல்போன்

மேலும் ஜோனதன் தோர்ன் ஒரு உயர்ரக செல்போனை வைத்து இருந்தார். அந்த செல்போனில் உள்ள தகவல்களை பெறுவதற்காகவும், முக்கிய ஆவணங்களை சேகரிப்பதற்காகவும் கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த செல்போனின் பாஸ்வேர்டை ஜோனதன் தோர்ன் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் கோர்ட்டு உத்தரவு பெற்று, அந்த செல்போனில் உள்ள தகவல்களை பெறுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வகத்துக்கு போலீசார் செல்போனை அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆய்வகத்திலும் அந்த செல்போனை திறக்க முடியவில்லை. இதனால் ஜோனதன் தோர்ன் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட வந்தாரா?, வேறு யாருக்காவது தொடர்புகள் உள்ளதா?, ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பது தெரியாமல் மர்மம் நீடிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்