தொழிலாளியை கொன்ற சூப் கடைக்காரர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளியை கொன்ற சூப் கடைக்காரர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர்
திருப்பூரில் சூப் விலை கேட்டதில் ஏற்பட்ட தகராறில் பனியன் நிறுவன தொழிலாளியை கொலை செய்த சூப் கடைக்காரர் உள்ளிட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
சூப் கடையில் தகராறு
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் கமலராஜன் (வயது 40). பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2-8-2019 அன்று இரவு திருப்பூர் கருவம்பாளையத்தில் உள்ள தனது மாமனார் கடைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு இரவு 10.30 மணி அளவில் ஆலாங்காட்டில் உள்ள சூப் கடைக்கு கமலராஜன் தனது மாமனாருடன் சூப் குடிக்க சென்றுள்ளார்.
கருவம்பாளையம் ஆலாங்காட்டை சேர்ந்த ராஜபாண்டி (23) என்பவரின் சூப் கடைக்கு சென்று, சூப் எவ்வளவு என்று கமலராஜன் கேட்டபோது, ரூ.35 என்று கூறியதும், இவ்வளவு விலையா? என்று கூறியதில் ராஜபாண்டிக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜபாண்டி மற்றும் அவருடைய நண்பர்களான கருவம்பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் (27) மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இளம் சிறார்கள் 2 பேர் என 4 பேரும் சேர்ந்து கமலராஜனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
2 பேருக்கு ஆயுள் தண்டனை
பின்னர் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் கமலராஜனை தள்ளிவிட்டு கழிவுநீரில் வைத்து அமுக்கியதில் அவர் மூச்சுத்திணறி இறந்தார். இதைத்தொடர்ந்து மத்திய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலை செய்த குற்றத்துக்காக விஸ்வநாதன், ராஜபாண்டி ஆகிய 2 பேருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். 2 சிறார்களின் வழக்கு தனியாக பிரித்து வேறு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.