சேலம் அருகேலாரி டிரைவரை அடித்துக்கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைதுபரபரப்பு வாக்குமூலம்
சேலம் அருகே கணவரை அடித்துக்கொன்ற மனைவியையும், அவருடைய கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர். கைதான மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பனமரத்துப்பட்டி
சேலம் அருகே கணவரை அடித்துக்கொன்ற மனைவியையும், அவருடைய கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர். கைதான மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரிந்து வாழ்ந்தனர்
சேலம் மணியனூர் காத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 46), லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜோதி (36). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி கணவரை பிரிந்து ஆட்டையாம்பட்டி சென்னகிரியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
அங்கு தாயார் வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். செந்தில்முருகன் தனது தாயார் சின்னப்பிள்ளையுடன் மணியனூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி குழந்தைகளை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற செந்தில்முருகன் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
கொலை-கைது
இதனிடையே நேற்று முன்தினம் காலை செந்தில்முருகன் மயங்கி கிடப்பதாக சின்னபிள்ளைக்கு தகவல் கூறி உள்ளனர். தொடர்ந்து அவர் சென்னகிரிக்கு சென்று மகனை பார்த்த போது, அங்கு அவர் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து தனது மகன் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக அவர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகாா் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில் முருகனை அவருடைய மனைவி ஜோதி கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோதியையும், அதே பகுதியில் வசிக்கும் அவருடைய கள்ளக்காதலன் சுரேசையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பரபரப்பு வாக்குமூலம்
இதில் ஜோதி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
செந்தில்முருகனை பிரிந்து வாழ்ந்து வந்த எனக்கு, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து உல்லாசமாக வாழ்ந்து வந்தோம். இது குறித்து எனது கணவர் செந்தில்முருகனுக்கும் தெரிந்துவிட்டது.
அவரும் அடிக்கடி நான் வசிக்கும் வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் செந்தில்முருகன் மீண்டும் எனது வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறு செய்தார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் சுயநினைவின்றி அங்கேயே மயங்கி விழுந்தார்.
அப்போது அங்கு சுரேஷ் வந்தார். அவரும், நானும் எனது கணவர் குறித்து பேசினோம். குறிப்பாக நாங்கள் இருவரும் உல்லாசமாக சேர்ந்து இருக்க செந்தில்முருகன் தொடர்ந்து தடையாக இருந்து வந்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.
ரீப்பர் கட்டையால் அடித்து...
இதையடுத்து சுரேசும், நானும் சேர்ந்து மயங்கி கிடந்த எனது கணவரின் மூக்கு, கழுத்து பகுதியில் கடுமையாக தாக்கினோம். அப்போது சுரேஷ் அருகில் இருந்த ரீப்பர் கட்டையை எடுத்து எனது கணவரின் தலையில் அடித்தார். அதில் செந்தில் முருகன் இறந்து விட்டார். அவர் இறந்து விட்டதை உறுதி செய்த பின் சுரேஷ் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
நான் ஒன்றும் நடக்காதது போல் எனது தாயார் வீட்டிற்கு வந்து விட்டேன். அடுத்த நாள் காலை எனது உறவினர்கள் மூலமாக எனது மாமியார் சின்னபிள்ளைக்கு போன் செய்து கணவர் மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தோம். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் நாங்கள் சிக்கிக்கொண்டோம்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.