செங்கோட்டை நகராட்சி கூட்டம்; தி.மு.க. கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில், வார்டு பிரச்சினைகளை கேட்கவில்லை எனக்கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-15 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், பொறியாளா் பிரிவு மேற்பார்வையாளா் காந்தி, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

கூட்டம் ஆரம்பித்ததும், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டத்தை முடித்துவிட்டு நகராட்சி தலைவா் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளியேறினா். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் ரஹீம், இசக்கிதுரை பாண்டியன், மேரி, பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள் மணிகண்டன், சந்திரா, சரவண கார்த்திகை, காங்கிரஸ் கவுன்சிலர் முருகையா ஆகியோர், எங்களது வார்டு பிரச்சினைகளை கேட்காமல் எப்படி தலைவா் கூட்டத்தை முடித்து விட்டு செல்லலாம்? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் கவுன்சிலர் இசக்கிதுரை பாண்டியன், எனது வார்டில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை எனக்கூறி நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது நகராட்சி தலைவா் ராமலட்சுமி, ஜீப்பில் ஏறி செல்ல முயன்றார். திடீரென்று இசக்கிதுரை பாண்டியன் ஜீப்பின் முன்பு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் நகராட்சி தலைவர் ஜீப்பில் இருந்து இறங்கி வெளியே சென்று விட்டார். இதைத்தொடர்ந்து இசக்கிதுரை பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, இசக்கிதுரை பாண்டியன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஆணையாளா் தலைமையில் சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் இசக்கிதுரை பாண்டியனின் வார்டு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்