சுயதொழில் புரிவோருக்கான கருத்தரங்கம்

நாங்குநேரி அருகே சுயதொழில் புரிவோருக்கான கருத்தரங்கம்- 11-ந் தேதி நடக்கிறது

Update: 2022-06-08 21:48 GMT

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எனது ஏற்பாட்டில் சிறு, குறு கிராமிய தொழில்கள் மற்றும் வர்த்தக கருத்தரங்கம் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. நாங்குநேரி-களக்காடு சாலையில் கடம்போடு வாழ்வு கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த படித்த, படிக்காத, அனுபவம் உள்ள சுயதொழில் செய்வோர், தொழில் செய்ய விரும்புவோர், விவசாயம் மற்றும் கால்நடை தொழில்களில் ஈடுபட விரும்புவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், மாவட்ட சிறு குறு தொழில்கள் சங்கம், செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி, தமிழ்நாடு சிறு குறு கிராமிய தொழில் முனைவோர் சங்கத்தின் நெல்லை கிளை உதவியோடு, மாவட்ட தொழில் மையம், எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிறுவனம் மற்றும் வங்கிகள் ஆதரவுடன் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

சுயதொழில் தொடங்க கடனுதவி பெற விரும்புவோர், தங்கள் புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தொழில் திட்டத்துடன் அன்றைய தினமே விண்ணப்பத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம். கருத்தரங்கம் நடைபெறும் நாள் அன்று காலை 8 மணிக்கு நாங்குநேரி மற்றும் களக்காடு பஸ் நிலையங்களில் இருந்து இலவச பஸ் வசதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்