செல்வ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செல்வ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-08-27 18:19 GMT

விராலிமலை தாலுகா, மதயானைப்பட்டி கிராமத்தில் சக்தி விநாயகர், செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி காவிரியில் இருந்து கோவிலுக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமத்துடன் முதல் மற்றும் 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 9.30 மணியளவில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலை கூடத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்தவாறு மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் தரிசனத்திற்கு பின்னர் சக்தி விநாயகர், செல்வ மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மதயானைப்பட்டி, மலையேறி, வில்லாரோடை, ஆம்பூர்பட்டி, பேராம்பூர், சோளியக்குடி, துறைக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மதயானைப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்