பேக்கரியில் கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை
கொடைக்கானலில் பேக்கரியில் கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை செய்ததால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் சுகாதாரமற்ற முறையிலும், கெட்டுப்போன உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் கூடிய தகவல்கள் வைரலானது. இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று சோதனை செய்தார். அப்போது அங்கு கெட்டுப்போன உணவுப்பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கெட்டுப்போன உணவுப்பொருட்களை அதிகாரி பறிமுதல் செய்து அழித்ததுடன், அதன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். மேலும் பேக்கரி கடை உரிமையாளருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பேக்கரிகளுக்கு, உணவுப்பொருட்களை தரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.