ரேஷன் அரிசி வெளி சந்தையில் விற்பனையா? தனியார் நெல் அரவை ஆலையில் போலீசார் திடீர் சோதனை

சேலம் அருகே ரேஷன் அரிசி வெளி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தனியார் நெல் அரவை ஆலையில் போலீசார் திடீரென சோதனை செய்தனர்.

Update: 2022-09-11 21:17 GMT

நெல் அரவை ஆலை

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள ஒரு தனியார் அரிசி அரவை ஆலைக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம் மூலம் ரேஷன் அரிசி தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலைக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நெல் மூட்டைகள் சரியாக பயன்படுத்தப்படுகிறதா? ரேஷன் அரிசியில் கலப்படம் ஏதும் செய்யப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்திட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி.ஆபாஷ்குமார் உத்தரவிட்டார்.

அரிசியில் கலப்படமா?

அதன்பேரில், சேலம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் அரிசி ஆலைக்கு சென்று திடீரென சோதனை செய்தனர்.

அப்போது ரேஷன் அரிசியை தயாரித்து அதை தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறதா? அரசு சார்பில் வழங்கப்படும் நெல் மூட்டைகள் சரியாக உள்ளதா? அரிசியில் கலப்படம் ஏதும் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை முடிவில் ஆலையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்