இளைஞர்களை தொற்றிய 'செல்பி'

இளைஞர்களை தொற்றிய ‘செல்பி' மோகம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-08-18 20:08 GMT

புகைப்படங்களின் சிறப்பும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடப்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி உலகப் புகைப்பட நாள் விழா கொண்டாடப்படுகிறது.

முதல் புகைப்படம்

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், 'டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். பிரெஞ்சு அறிவியல் அகாடமி அந்தக் கண்டுபிடிப்பை அங்கீகரித்தது. அதை 'உலகிற்கு ஒரு பரிசு' என்று அழைத்தது. பின்னர் பிெரஞ்சு அரசாங்கம் காப்புரிமையை வாங்கியது. ஆகஸ்டு 19-ந்தேதி, பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை 'பிரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைக்கும் உலகப் புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

1826-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839-ம் ஆண்டு லூயிஸ் டாகுவேரே, பாரிசில் உள்ள போல்வர்டு கோவிலை, அருகில் உள்ள தெருவைப் புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவாகும்.

வரலாற்றுப்படங்கள்

20-ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன.

குறிப்பாக, சீன வீரர்களின் ராணுவப் பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994-ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப்பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றைக் கூறலாம்.

சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு புலிட்சர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வரலாற்றோடு வளர்ந்து வரும் புகைப்படக்கலை தற்போது அனைவரது கைகளுக்கும் செல்போன்கள் மூலம் சென்றுவிட்டது. தன்னையே தான், படம் எடுக்கும் செல்பி வரைக்கும் வளர்ந்துவிட்டது.

புகைப்பட கலைஞர்

இதுபற்றி இளைஞர்கள், பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

விருதுநகரை சேர்ந்த புகைப்பட கலைஞர், தலைவர் என்பவர் கூறியதாவது:-

46 ஆண்டுகளாக புகைப்பட தொழில் செய்து வருகிறேன். தற்போது நிறைய பேர் செல்போனையே கேமராவாக பயன்படுத்தி வருகின்றனர்.

செல்போன் மூலம் படம் எடுப்பதால் பெரும்பாலான புகைப்பட கலைஞர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் படத்தை போல செல்போன் படம் தெளிவாக இருப்பதில்லை.

சுப நிகழ்ச்சி

மாங்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரூபி:-

செல்போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா தலம், , சுப நிகழ்ச்சி, கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லும் போது நண்பர்கள், உறவினர்கள் இணைந்து புகைப்படம் எடுப்பதற்கு போட்டோ கிராபர்களை தேட வேண்டும். ஆனால் தற்போது செல்போன் மூலம் செல்பி எடுத்து நாங்கள் மகிழ்ந்து கொள்கிறோம்.

புகைப்படத்தில் இருக்கும் மகிழ்ச்சி, செல்பியில் இருப்பது இல்லை. எனினும் நிறைய பேர் செல்பியை தான் விரும்புகின்றனர். ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

செல்பி மோகம்

அன்பின்நகரத்தை சோ்ந்த ஆசிரியர் டேவிட் ஹென்றி ராஜன்:-

தற்போது இளைஞர்களிடம் செல்பி மோகம் வெகுவாக அதிகரித்து வருகிறது. செல்பி மோகத்தால் ெரயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவமும், வெள்ளப்பகுதி, ஆபத்தான மலையின் உச்சியில் இருந்து செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றாலும் இளைஞர்களிடையே செல்பி மோகம் குறையாமல் உள்ளது.

செல்பி எடுக்கும் போட்டோவை சிலர் பாராட்டுகிறார்கள் என்பதற்காக ஆபத்தை விலைக்கு வாங்க கூடாது. இது மிகவும் தவறானதாகும்.

திருத்தங்கலை சேர்ந்த புகைப்படக் கலைஞர் சூர்யா:-

கடந்த 5 ஆண்டுகளாக புகைப்பட தொழில் வேகமாக சரிந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் தங்கள் செல்போனில் புகைப்படங்களை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள். திருமண நிகழ்ச்சிகளில் கூட குறிப்பிட்ட சில சடங்குகளை மட்டுமே புகைப்படக்கலைஞர்கள் எடுத்துக் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

புகைப்படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. ஆனால் தற்போது அதை மாற்றும் வகையில் செல்போன்கள் மூலம் செல்பி புகைப்படங்களை எடுத்து புகைப்படத் தொழிலுக்கு பெரும் சரிவை பலர் ஏற்படுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இளைஞர்களை தொற்றிய 'செல்பி' 

Tags:    

மேலும் செய்திகள்