விழுப்புரத்தில் நடைபெறும் சிறப்பு தொழிற்கடன் விழாவில் மத்திய, மாநில அரசு மானியத்துடன் கடனுதவி பெற்று சுயதொழில் தொடங்கலாம் கலெக்டர் மோகன் அறிவுரை

விழுப்புரத்தில் நடைபெறும் சிறப்பு தொழிற்கடன் விழாவில் மத்திய, மாநில அரசு மானியத்துடன் கடனுதவி பெற்று சுயதொழில் தொடங்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2022-08-18 16:58 GMT


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன்  வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகமாகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி மற்றும் மானிய சலுகைகளை வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் இயங்கும் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா வருகிற 2.9.2022 வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய- மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

அரசு மானியம்

இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக்கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகைதந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்