அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு
தொரப்பாடியில் உள்ள 160 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 367 பேர் பணம் செலுத்தியதால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தொரப்பாடியில் உள்ள 160 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 367 பேர் பணம் செலுத்தியதால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்புகள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் 160 அடுக்குமாடி குடியிருப்புகள் வேலூர் தொரப்பாடி பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு, அவை கடந்த மாதம் 10-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 824 பயனாளிகளில் 367 பேர் மட்டுமே பங்களிப்பு தொகையான ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்தை வரைவோலையாக செலுத்தியிருந்தனர். அவர்களுக்கு, வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நேற்று குலுக்கல் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணி முதல் பணம் செலுத்தியவர்கள் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வரத்தொடங்கினர்.
குலுக்கல் முறையில் தேர்வு
அவர்களிடம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய ஊழியர்கள் பணம் செலுத்தியதற்கான வரைவோலையை பெற்று பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து டோக்கன் வழங்கினர். நேரம் செல்ல, செல்ல ஏராளமான பயனாளிகள் அங்கு குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் அவர்களை ஒழுங்குப்படுத்தி வரிசையாக டோக்கன் வாங்கி செல்லும்படி அறிவுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குலுக்கல் நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் கீதா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிர்வாக பொறியாளர் கணேசன், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) டாக்டர் பிரசன்னகுமார், மாவட்ட சமூகநல அலுவலர் வினோலியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வீடு, நிலம் இருக்க கூடாது...
முதற்கட்டமாக 135 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குலுக்கல் நடைபெற்றது. ஒரு பெட்டியில் 135 டோக்கன்களும், மற்றொரு பெட்டியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களும் போடப்பட்டிருந்தன. அவை ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட 25 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இதேபோன்று குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் தாசில்தார்கள் செந்தில், பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் தேர்வானது தற்காலிகமானது. குலுக்கலில் தேர்வான பயனாளிக்கு வேறு வீடோ, நிலமோ இருக்கக்கூடாது. வீடு, நிலம் இருந்தாலோ அல்லது முகவரி, இருப்பிடம், ஆதார் எண், வருமான சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ் உள்ளிட்டவற்றில் தவறு இருக்கும் பட்சத்தில் பயனாளியின் தேர்வு ரத்து செய்யப்படும். மீண்டும் அந்த குடியிருப்புகளுக்கு குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றனர்.
தொரப்பாடி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நடந்த குலுக்கலில் பங்கேற்க வந்த பயனாளிகள், உறவினர்களால் வேலூர் கலெக்டர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.