குரூப்-4 தேர்வை 36,928 பேர் எழுதினார்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த குரூப்-4 தேர்வை 144 மையங்களில் 36, 928 பேர் எழுதினார்கள். 8,594 பேர் தேர்வு எழுதவில்லை.

Update: 2022-07-24 17:11 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த குரூப்-4 தேர்வை 144 மையங்களில் 36, 928 பேர் எழுதினார்கள். 8,594 பேர் தேர்வு எழுதவில்லை.

குரூப்-4 தேர்வு

தமிழகம் முழுவதும் நேற்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கான குரூப்-4 தேர்வு நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவில் 144 மையங்களில் நேற்று குரூப்-4 தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 45,522 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் 48 மையங்களில் 13,336 பேரும், அஞ்செட்டி தாலுகாவில் ஒரு மையத்தில் 364 பேரும் தேர்வு எழுதினார்கள்.

பர்கூர் தாலுகாவில் 11 மையங்களில் 2,694 பேரும், ஓசூர் தாலுகாவில் 35 மையங்களில் 7,868 பேரும், போச்சம்பள்ளி தாலுகாவில் 23 மையங்களில் 5,768 பேரும் தேர்வு எழுதினர். சூளகிரி தாலுகாவில் 4 மையங்களில் 869 பேரும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 4 மையங்களில் 1,114 பேரும், ஊத்தங்கரை தாலுகாவில் 18 மையங்களில் 4,915 பேரும் தேர்வு எழுதினர்.

8,594 பேர் தேர்வு எழுதவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 144 மையங்களில் 36,928 பேர் தேர்வு எழுதினர். 8,594 பேர் தேர்வு எழுதவில்லை. இதன்படி, விண்ணப்பித்து இருந்தவர்களில் 8,112 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். குந்தாரப்பள்ளி சரஸ்வதி வித்யாலயா பள்ளி மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதியும் அனைத்து மையங்களிலும் செய்யப்பட்டு இருந்தன. அத்துடன் முறைகேடு நடைபெறாமல் தடுக்க மேற்பார்வை அலுவலர்கள், பறக்கும் படை, நடமாடும் அலகு அமைக்கப்பட்டு இருந்தது.

மாவட்டத்தில் சில மையங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வராத தேர்வர்களை தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த தேர்வு மைய அலுவலர்களிடம் தேர்வர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது காலை 9 மணிக்குள் மையத்திற்குள் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிலர் காலை 9.10, 9.15 மற்றும் 9.30 மணி வரையில் வந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க இயலாது என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்