மாவட்டத்திற்கு 10 இடங்களை தேர்வு செய்து"தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை" எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்திற்கு 10 இடங்களை தேர்வு செய்து “தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை” எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
"மாவட்டத்திற்கு 10 இடங்களை தேர்வு செய்து தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
அமைச்சர் ராமச்சந்திரன்
திருச்செந்தூரில் சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுபடி சுற்றுலாவை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு செய்து வருகிறோம். திருச்செந்தூரில் 1967-ம் ஆண்டில் இருந்து ஓட்டல் தமிழ்நாடு 47 அறைகளுடன் இயங்கி வருகிறது. மேலும், கூடுதல் அறைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது ஓட்டலில் உள்ள படுக்கைகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், இங்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்காக சுமார் 55 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து வருகிறோம். வருகிற 5-ந் தேதி நடைபெறும் சுற்றுலா மேம்பாடு தொடர்பான ஆய்வு கூட்டத்தில் ஓட்டல் தமிழ்நாடுகளில் உள்ள அறைகளின் வாடகை தொடர்பாக ஆலோசிக்கப்படும்.
மேம்படுத்த நடவடிக்கை
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுபடி ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், மணப்பாடு திருச்சிலுவை ஆலயம் ஆகிய 2 இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகள் அடுத்த ஆண்டு மேற்ெகாள்ளப்படும்.
சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை
மேலும், ராமேஸ்வரத்திற்கு கடந்த ஆண்டு 1.80 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு கடந்த 6 மாதத்தில் மட்டும் 1.60 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த ஆண்டுக்குள் சுமார் 3 கோடி சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் திருச்செந்தூருக்கு கடந்த ஆண்டு 58.67 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்த ஆண்டு கடந்த 4 மாதத்தில் மட்டும் 28.22 லட்சம் பேர் வந்துள்ளனர். இதை இன்னும் அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் திருப்பதி கோவிலைவிட திருச்செந்தூர் கோவில் சிறப்பாக இருக்கும். எனவே வரும் காலங்களில் இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த ஆய்வின்போது, சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப்நந்தூரி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், சுற்றுலா வளர்ச்சிக்கழக மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், சுற்றுலா அலுவலர் திருவாசன், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் உள்பட பலர் உடன் சென்றனர்.