சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.57 ஆயிரம் பறிமுதல்
சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கே.வி.குப்பம் பஸ் நிலையம் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சார்பதிவாளராக சிவக்குமார் உள்ளார். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு லஞ்ச ஒழிப்புத் துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் விஜய், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், கேசவன், இளவரசன் உள்ளிட்டோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். மேலும் சந்தேகத்திற்கு இடமாக சிக்கி உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
சார் பதிவாளர், அலுவலக ஊழியர்கள், ஆவண எழுத்தர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. தகவல் அறிந்ததும் அருகில் உள்ள ஆவண எழுத்தர் அலுவலகங்கள் மூடப்பட்டன. இந்த ஆய்வில் கணக்கில் வராத ரூ.57 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சார் பதிவாளர் சிவக்குமார் மீது ஊழல்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.