நடைபாதையில் நின்ற இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் நிறுத்தியிருந்த 15 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் நிறுத்தியிருந்த 15 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
போக்குவரத்து நெரிசல்
நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சாலையோரத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகே இருந்து அண்ணா பஸ் நிலையம் வரை உள்ள நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
இதையடுத்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிாிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் நேற்று தலைமை தபால் நிலையம் முதல் அண்ணா பஸ் நிலையம் வரை உள்ள நடைபாதையில் ஆய்வு நடத்தினர். அப்போது நடைபாதையில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த வகையில் மொத்தம் 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் மீட்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு கணேசபுரத்தில் உள்ள போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உரிய ஆவணங்கள்
இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் கூறுகையில், "பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி அபராதம் செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும்" என்றார்.