பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல்
பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலூர்,
விழுப்புரம் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையிலான போலீசார் ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த அரசு பஸ்சில் இருந்து முதியவர் ஒருவர் பெரிய அட்டை பெட்டியுடன் இறங்கினார். அப்போது அவர் அங்கிருந்த போலீசாரை பார்த்ததும் தான் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றார். இதையடுத்து அந்த பெட்டியை போலீசார் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 7000 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 196 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. விசாரணையில் ஆடூர்கொளப்பாக்கத்தை சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவர் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை பஸ்சில் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை அரகண்டநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காமராஜை தேடி வருகின்றனர்.