சிவகாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
வகாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.12 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.12 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்கள்
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்திக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து சுகாதார அதிகாரிகள் பாண்டியராஜன், அபுபக்கர்சித்திக், முத்துப்பாண்டி, கந்தசாமி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து மாநகராட்சிக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் திடீர் சோதனை செய்தனர்.
ரூ.12 ஆயிரம் அபராதம்
இதில் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பொருட்களை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதனை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டார். பின்னர் இந்த பொருட்களை பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணசாமிக்கு, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ரூ.12 ஆயிரம் அபராதம் வசூலிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் ரூ.12 ஆயிரத்தை கிருஷ்ணசாமியிடம் வசூலித்தனர்.
நடவடிக்கை
சிவகாசி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகளின் நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
இதேபோன்ற திடீர் ஆய்வுகள் அவ்வப்போது நடக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.