ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழங்கள் பறிமுதல்

சேலத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-05-11 20:33 GMT

சேலத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குடோனில் சோதனை

சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் களை கட்டியுள்ளது. இதனால் சேலம் மாநகரில் உள்ள மொத்த கடைகளுக்கு மாம்பழம் வரத்து அதிகரித்து, விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. சேலம் மாம்பழம் மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும் என்பதால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சேலத்தில் உள்ள சில மாம்பழ குடோன்களில் ரசாயனம் தெளித்து செயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள மாம்பழ குடோன்களில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

6 டன் மாம்பழங்கள் பறிமுதல்

அப்போது, அரசமரத்து பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு மாம்பழ குடோனில், எத்திபான் ரசாயனத்தை தெளித்து செயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த சுமார் 6 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருந்த ரசாயனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் கூறியதாவது:-

ரசாயனம் தெளித்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது என்று ஏற்கனவே வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில கடைகளில் ரசாயனம் தெளித்து மாம்பழங்களை பழுக்க வைக்கப்பட்டு வருவதாக வந்த புகாரை தொடர்ந்து சேலம் சின்னக்கடை வீதியில் சில மாம்பழ குடோன்களில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, ஒரு குடோனில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்த 6 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் உரிமம் இல்லாமல் விற்பனை செய்தது கண்டறியப்பட்டதால் சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்