எடப்பாடி பகுதியில் அனுமதி இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற கார் பறிமுதல்
எடப்பாடி பகுதியில் அனுமதி இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற கார் பறிமுதல் செய்யப்பட்டது.
எடப்பாடி:
எடப்பாடி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியம், போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் தலைமையில் குழுக்களாக பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக ஆய்வாளர் புஷ்பா தலைமையில் போக்குவரத்து அலுவலர்கள் ஜலகண்டாபுரம்- சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தனியார் கார் ஒன்று உரிய அனுமதி இல்லாமல் பள்ளி குழந்தைகளை அதிக அளவில் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போக்குவரத்து ஆய்வாளர் புஷ்பா அந்த வாகனத்தை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதி இன்றி தனியார் வாகனங்கள் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆய்வாளர் புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.