குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
நாகர்கோவிலில், குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில், குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
நாகர்கோவில் கோட்டார் பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சிக்கு அலுவலகத்துக்கு நேற்று புகார் வந்தது. இதனைதொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் தலைமையில் மாநகர் நல அதிகாரி விஜயசந்திரன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் கோட்டாரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை ஒரு கடைக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்த போது 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
'சீல்' வைப்பு
தொடர்ந்து குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் குடோனுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி புகார் எண்ணான 94870 38984 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகைப்படத்துடன் புகாரினை பதிவு செய்யலாம் என்று ஆணையர் ஆனந்த் மோகன் கூறியுள்ளார்.