தா்மபுாி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறிய 863 வாகனங்கள் பறிமுதல்-சாலை வரி-அபராதம் ரூ.4 கோடி வசூல்

Update: 2023-01-10 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 863 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சாலை வரி மற்றும் அபராத தொகையாக ரூ.4 கோடி வசூலிக்கப்பட்டது.

வாகன தணிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை போக்குவரத்து துறை சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல், தர்மபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் 39 ஆயிரத்து 500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 591 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டன.

குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற போக்குவரத்து விதி மீறல்களுக்காக 863 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அபராதம்

மேலும் அதிக ஆட்களை ஏற்றி சென்றதாக 185 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றி சென்ற 156 வாகனங்களுக்கும், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கிய 351 வாகனங்களுக்கும், அதிவேகமாக சென்ற 3 ஆயிரத்து 642 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 315 வாகனங்களுக்கும், காப்புச்சான்று, புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 1,716 வாகனங்களுக்கும், சிவப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 670 வானங்களுக்கும், சிவப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 327 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் போது அபராதம் விதிக்கப்பட்டது.

ரூ.4 கோடி வசூல்

இந்த வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.2 கோடியும், அபராதமாக ரூ.2 கோடியும் என மொத்தம் 4 கோடி வசூலிக்கப்பட்டது.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசுக்கு வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்