பட்டாசு வெடித்து இடையூறு ஏற்படுத்துபவர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை- சென்னிமலையில் பரபரப்பு
பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னிமலை போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை
பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னிமலை போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டாசு வெடித்து...
சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்டது அம்மாபாளையம். இங்கு வசிக்கும் ஒருவர் அடிக்கடி இரவு நேரத்தில் சம்பந்தமில்லாமல் பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது. பட்டாசு சத்தத்தால் கால்நடைகள் கயிற்றை அவிழ்த்து கொண்டு ஓடி விடுவதாக பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலையில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசை அந்த நபர் வெடித்ததாக தெரிகிறது. இதில் தீ பரவி அங்குள்ள ஊஞ்சலாங்காட்டை சேர்ந்த தங்கராசு என்பவரின் தோட்டத்தில் உள்ள வேலியில் தீப்பிடித்து எரிந்தது.
பின்னர் இதுபற்றி சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்த நிலையில் அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று இரவு 8.30 மணி அளவில் அம்மாபாளையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு தரையில் உட்கார்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், 'பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடிப்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு இரவு 9.45 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் சென்னிமலை போலீஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.