கருப்பன் யானையை பிடிக்க வலியுறுத்தி வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

கருப்பன் யானையை பிடிக்க வலியுறுத்தி வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டார்கள்.

Update: 2023-01-09 21:28 GMT

தாளவாடி

கருப்பன் யானையை பிடிக்க வலியுறுத்தி வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டார்கள்.

கருப்பன் யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 3 மாதமாக ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட திகினாரை, ஜோராக்காடு, கரளவாடி, மரியபுரம் பகுதியில் கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ் பயிர்களை சேதம் செய்து வருகிறது. யானையை விரட்டும் விவசாயிகளையும் கருப்பன் யானை துரத்துகிறது.

முற்றுகை

இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் மற்றும் அரிசிராஜா என்ற 2 கும்கி யானைகள் ஜோராக்காடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால் இன்னும் கருப்பன் யானையை பிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் கருப்பன் யானையை விரைந்து பிடிக்க வலியுறுத்தி நேற்று 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆசனூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

கருப்பன் யானை தொடர்ந்து பயிர்களை அழித்து வருவதால், பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக கருப்பன் யானையை பிடிக்கவில்லை என்றால் மாபெரும் போராட்டத்தில் இறங்க போவதாக மாவட்ட வன அலுவலரிடம் முறையிட்டனர். இதனைக் கேட்ட மாவட்ட வன அலுவலர் உடனடியாக கருப்பன் யானையை பிடித்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என உறுதி அளித்தார். இதனால் விவசாயிகள் களைந்து சென்றார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்