சத்தியமங்கலம் நகராட்சி மேலாளரை கவுன்சிலர்கள் திடீர் முற்றுகை
சத்தியமங்கலம் நகராட்சி மேலாளரை கவுன்சிலர்கள் திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலம் நகராட்சி மேலாளரை கவுன்சிலர்கள் திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
சத்தியமங்கலம் நகராட்சியில் காய்கறி மார்க்கெட் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. நகராட்சி கவுன்சிலர்கள் 15 பேர் நேற்று மதியம் 12 மணி அளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்த அலுவலக மேலாளர் நாகராஜனை முற்றுகையிட்டனர். அவரிடம் நகராட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது, 'பழைய தினசரி மார்க்கெட் இடிக்கப்பட்ட போது 100 ஆண்டுகள் பழமையான விலை உயர்ந்த மரங்கள், சிமெண்ட் சீட்டுக்கள், இரும்பு சட்டங்கள் மற்றும் இரும்பு குழாய்கள் உள்ளிட்ட சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் முறையாக ஏலம் விடப்படவில்லை.
வாக்குவாதம்
நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வராமல் எந்த கவுன்சிலர்களுக்கும் தெரிவிக்காமல் அந்த பழைய பொருட்களை நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக ஏலம் விட்டுள்ளது' என்றனர். மேலும் நகராட்சி மேலாளருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜன் நகராட்சி கவுன்சிலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கவுன்சிலர்களிடம் கூறும்போது, 'இதுசம்பந்தமாக புகார் கொடுங்கள். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதனை ஏற்றுக்கொண்ட நகராட்சி கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.