பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தனிப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தனிப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு புதன்கிழமை வருகை தர உள்ளார். வேலூர் புதிய பஸ்நிலையத்தை மதியம் 1 மணியளவில் திறந்து வைக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். முதல்-அமைச்சர் வேலூர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேலூர் புதிய பஸ்நிலையம், முதல்-அமைச்சர் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுக்கும் சுற்றுலா மாளிகை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் கோட்டை மைதான விழாமேடையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அனைத்துத்துறை அரசு அதிகாரிகளுடன் பாதுகாப்பு மற்றும் விழாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின்போது ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.