செக்சன்-17 நிலப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்

செக்சன்-17 நிலப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசினார்.

Update: 2023-10-04 20:30 GMT

தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் 5 முனை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்றத்தில் என்னை கண்டால் பா.ஜ.க.வினர் நடுங்குகின்றனர். இதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி வகுத்த தத்துவ கோட்பாடுகள். ஆனால் அவர்களிடம் எந்த கொள்கையும் கிடையாது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தல் உள்ளிட்ட காரணங்களால் அதானி உலக பணக்காரர் வரிசையில் இடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடி ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களிடம் அதானியை அறிமுகப்படுத்தி பல்வேறு ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.

இதில் பல்வேறு முறைகேடுகளில் அதானி நிறுவனம் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியபோது மோடி சபைக்கு வரவில்லை. மேலும் ஊழல் குற்றச்சாட்டு, மணிப்பூர் பிரச்சினை குறித்து வாய் திறப்பதில்லை. 18 வயது நிரம்பியவர்கள் விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெறலாம் என மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இது குலத் தொழிலை பாதுகாக்க கொண்டு வரப்பட்டது.

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒட்டுமொத்தமாக மோடியை வீட்டிற்குள் அனுப்புவதற்காக தயாராக உள்ளனர். கூடலூர் பகுதியில் செக்சன்- 17 நிலப்பிரச்சினை குறித்து கடந்த 6 மாதங்களாக முதல்- அமைச்சர் நேரடியாக தலையிட்டு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஓவேலி பகுதியில் ஆய்வு செய்து தனியார் எஸ்டேட்டுகளின் நிலங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் நிலங்கள், வனம் எவ்வளவு இருக்கிறது என பிரத்யேகமாக பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் எத்தனை பேருக்கு பட்டா வழங்க வேண்டும். எவ்வளவு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என பட்டியலிட்டு இந்த வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் நிலப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி, திட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்