சீமான் உருவபொம்மை எரிப்பு; 18 பேர் கைது
நெல்லையில் சீமான் உருவபொம்மை எரிக்கப்பட்டது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட மொழி, சமுதாய மக்களை அவதூறாக பேசி உள்ளதாக கூறி பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் அருந்ததிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் முருகன் தலைமையில் சீமானின் 2 உருவபொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உருவபொம்மை தீயில் எரித்து கொண்டிருந்த போதே, அதை ஒருவர் சாலையில் இழுத்து சென்று தூக்கி வீசியவாறு கோஷங்கள் எழுப்பினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் பேன்ட் மீது தீப்பொறி விழுந்தது. அவர் சுதாரித்துக் கொண்டு நகர்ந்ததால் காயமின்றி தப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திராவிட தமிழர் கட்சி நிர்வாகி திருக்குமரன் தலைமையில் வண்ணார்பேட்டையில் சீமானின் உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் போராட்டம் செய்தனர். இதையடுத்து 12 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தமிழ் புலிகள் அமைப்பு சார்பில் தமிழ்மணி தலைமையில் சீமானின் உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.