2 கடைகளுக்கு `சீல'்
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு `சீல'் வைக்கப்பட்டது
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வடமலைசமுத்திரத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 84). இவர் வடலைசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களக்காடு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது கடையில் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை நடத்தி, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆனால் மீண்டும் அவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், களக்காடு நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி (பொ) சங்கரநாராயணன் மற்றும் போலீசார், உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்ததால் அந்த கடைக்கு அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.
இதேபோல் களக்காடு புலவன்குடியிருப்பை சேர்ந்தவர் பெருமாள் (61). இவரது கடையிலும் அடிக்கடி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், தொடர்ந்து புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அவரது கடைக்கும் `சீல்' வைக்கப்பட்டது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர்கள் செல்லப்பாண்டி, பெருமாள் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.