நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
டெல்லியை தலைமையிடமாக கொண்டு சேவை அமைப்பாக பி.எப்.ஐ. என்று அழைக்கப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மீது புகார்கள் எழுந்தன.
அதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. கடந்த மாதம் 22-ந்தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் பி.எப்.ஐ. அமைப்பின் அலுவலகங்கள், அவற்றின் நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மீண்டும் 27-ந்தேதி 8 மாநிலங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தடை
இந்தநிலையில் ஐ.எஸ். போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்பில் உள்ளது என்று கூறி, அந்த அமைப்பை மத்திய அரசு கடந்த 28-ந்தேதி 5 ஆண்டு காலத்துக்கு அதிரடியாக தடை செய்தது.
அதை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
'சீல்' வைப்பு
அதைத்தொடர்ந்து நேற்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் இளங்கடை பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். பின்னர் அலுவலகம் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையொட்டி நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ஜெயலட்சுமி மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதே போல் வடக்கு சூரங்குடியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கிளை அலுவலகத்துக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவங்களால் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.