கொட்டில்பாடு பகுதியில் மீண்டும் கடல் சீற்றம்

குளச்சல் கொட்டில்பாடு பகுதியில் மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டது.

Update: 2022-08-16 18:49 GMT

குளச்சல்:

குளச்சல் கொட்டில்பாடு பகுதியில் மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டது.

கொட்டில்பாடு

குமரியில் கடந்த மாதம் இறுதியில் கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. கடந்த 6-ந் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

அதன் பிறகு கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குளச்சல் அருகே கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதில் ராட்சத அலைகள் எழுந்து அலை தடுப்பு சுவரை தாண்டி புகுந்தது.

மீண்டும் கடல் சீற்றம்

இந்த சீற்றத்தால் கொட்டில்பாடு கிழக்கு பகுதியில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்தது. மேலும் மணலரிப்பும் ஏற்பட்டது. தென்னை மரங்களின் வேர் பகுதி வரை மணலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மரங்கள் சாயும் நிலையில் இருந்தது.

இந்தநிலையில் நேற்று மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டு அலை தடுப்புச்சுவரை தாண்டி தண்ணீர் புகுந்தது. இதில் கொட்டில்பாடு கிழக்கு பகுதியில் உள்ள ஜெகன் (வயது 36) என்பவர் வீட்டுக்குள் கடல் நீருடன் மணலும் உள்ளே சென்றது. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் மீனவர்கள் வலை பின்னும் கூடம் சேதமடைந்தது. அதாவது வலை பின்னும் கூடத்தின் முன்பு சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார கற்கள் பெயர்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளது.

தொடரும் கடல் சீற்றத்தினால் கொட்டில்பாடு கிழக்கு பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதற்கிடையே கடல் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை குளச்சல் 'பி' கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் பார்வையிட்டார். இதுபோன்ற சீற்றத்தில் இருந்து தப்பிக்க நிலையான உறுதியான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்