தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை நெருங்கும் கடல் அரிப்பு
அலைத்தடுப்பு சுவர்கள் சேதம் அடைந்து விட்டதால் தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கடல் அரிப்பு நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறையாறு:
அலைத்தடுப்பு சுவர்கள் சேதம் அடைந்து விட்டதால் தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கடல் அரிப்பு நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டேனிஷ்கோட்டை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புகழ் பெற்ற டேனிஷ்கோட்டை உள்ளது.. இந்த கோட்டையில் இரண்டு தளங்கள் உள்ளன. இந்த தளங்களில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
மேல்தளத்தில், கவர்னர்கள், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் அறையும், கீழ் தளத்தில், பண்டகசாலை, சிறைச்சாலை, சமையல் அறை, ராணுவ வீரர்களுக்கான அறைகள், குதிரை லாயம், வெடிமருந்து கிடங்கு ஆகியவையும் உள்ளன.
அருங்காட்சியகம்
கோட்டையின் உட்புறத்தில் புல்வெளி தளம், முதல் தளத்தை பார்வையாளர்கள் சுற்றிப்பார்க்க நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோட்டையில் தற்போது தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.டேனிஷ் காலப் பொருட்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், பழைய பீரங்கிகள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. டேனிஷ் கோட்டையும், அருங்காட்சியகத்தையும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.
அலைத்தடுப்புச்சுவர்கள் சேதம்
கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு டேனிஷ் கோட்டையின் வெளிப்புறத்தில் அலைதடுப்புச் சுவரின் ஒருபகுதி முற்றிலும் சேதமடைந்து இடிந்தது.இந்த நிலையில் மாண்டஸ் புயலால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் டேனிஷ் கோட்டையின் அலைத்தடுப்புச் சுவரின் மற்றொரு பகுதியும் சேதம் அடைந்துள்ளது. இதுதவிர கோட்டை மதில் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த முள்வேலி தடுப்பு சுவரும் சேதம் அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, தொடர் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு டேனிஷ் கோட்டையை நெருங்கி வருகிறது.
கோட்டையை நெருங்கும் கடல் அரிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோட்டை மதில் சுவரில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை வந்த கடல் அலைகள், தற்போது மணலை அரித்து 55 மீட்டர் தொலைவிற்குள் வந்து விட்டது. எனவே கடல் அரிப்பை தடுக்க கடற்கரையில் கருங்கல்லான தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ெடன்மார்க் நாட்டில் இயங்கி வரும் "டேனிஷ்-டிராங்குபார் அசோசியேஷன்" என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் கூறுகையில், கடல் அரிப்பால் அலைத்தடுப்புச்சுவர் சேதம் அடைந்து விட்டன. இதனால் கடல் அரிப்பு டேனிஷ் கோட்டையை நெருங்கி வருகிறது. கடல் அரிப்பு தொடர்ந்தால், டேனிஷ் கோட்டையின் சுவர்களை அலைகள் தாக்கும் நிலை ஏற்படும். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கோட்டையை கடலிடம் இழக்கும் நிலை கூட வரலாம். தமிழக அரசு கோட்டை அருகே கருங்கல்லால் ஆன அலைத்தடுப்புச் சுவர் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருங்கல் தடுப்புச்சுவர்
இதுகுறித்து தரங்கம்பாடி வரலாற்று நூலாசிரியர் எம்.ஏ.சுல்தான் கூறுகையில், தரங்கம்பாடி கடற்கரையில் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் வீசி வரும் ஓசோன் காற்று. இதை சுவாசிக்க பல்வேறு நாட்டினரும் இங்கு வந்து செல்கின்றனர்.மேலும் கல்வி சுற்றுலா வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் டேனிஷ் கோட்டையை கண்டு களித்து செல்கின்றனர்.வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். கடற்கரையில் கருங்கற்களால் ஆன தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.அப்போதுதான் கடல் அரிப்பில் இருந்து டேனிஷ் கோட்டையே காப்பாற்ற முடியும்.
படகு துறை
சுற்றுலா துறையே மேம்படுத்தும் வகையில் டேனிஷ் கோட்டையில் இருந்து மேற்கு பகுதியில் பூங்கா, வாட்டர் பவுண்டேஷன், சுற்றுலா படகு துறை அமைக்க வேண்டும். இதற்காக உப்பனாறு பகுதியில் தூர்வாரி கரையில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றார்.