ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

வேளாங்கண்ணி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை கடத்திய அண்ணனும், தம்பியும் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-05 19:15 GMT

வேளாங்கண்ணி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை கடத்திய அண்ணனும், தம்பியும் கைது செய்யப்பட்டனர்.

கடல் அட்டைகள்

கடலில் வாழும் அரிய வகை உயிரினங்களுள் ஒன்று கடல் அட்டை. இந்தியாவில் இவற்றை பிடிப்பதற்கு தடை அமலில் உள்ளது. வெளிநாடுகளில் கடல் அட்டைகள் உணவுக்காகவும், மருந்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக கடல் அட்டைகள் இந்தியாவில் சட்டவிரோதமாக பிடித்து அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

இந்த நிலையில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகளிடம் இருந்து வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

ரூ.30 லட்சம் மதிப்பில்...

அதன்பேரில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகை சாலையில் சின்னத்தும்பூர் பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தவழியாக வந்த சரக்கு வேனை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் சரக்கு வேனில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் 10 பெட்டிகளில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

அண்ணன்-தம்பி கைது

மேலும் வேனில் வந்தவர்கள் நாகை அருகே உள்ள பாப்பாக்கோவில் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன்கள் சிங்காரவேல் (வயது 27), கேசவன்(20) ஆகியோர் நாகை அக்கரைப்பேட்டையில் இருந்து சரக்கு வேனில் ராமேசுவரத்துக்கு கடல் அட்டைகளை கடத்திச்சென்றதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேல், கேசவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் மற்றும் கடல் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்