அண்ணன்-தங்கைக்கு அரிவாள் வெட்டு; அதிர்ச்சியில் தாத்தா சாவு
நாங்குநேரியில் நேற்று இரவில் வீடு புகுந்து அண்ணன்-தங்கையை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இதனைப் பார்த்த அதிர்ச்சியில் தாத்தா இறந்தார்.
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திராசெல்வி (14) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். பின்னர் இரவில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
இந்த நிலையில் இரவு 10 மணியளவில் திடீரென்று முனியாண்டியின் வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கூச்சலிட்டனர். உடனே மர்மநபர்கள் தப்பி சென்றனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திராசெல்விக்கு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதைப் பார்த்த அவர்களுடைய தாத்தா கிருஷ்ணன் (59) அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடுபுகுந்து அண்ணன்-தங்கையை அரிவாளால் வெட்டிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.