கோஷ்டி மோதலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது
போடி அருகே கோஷ்டி மோதலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லத்தீப் (வயது 35). இவரது வீட்டின் அருகில், உறவினருக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. அந்த நிலத்தை லத்தீப் பராமரித்து வந்தார். இந்த நிலம் தொடர்பாக லத்தீப்புக்கும், அதே ஊரை சேர்ந்த பாலமுருகன், மாடத்தி, பெருமாள், கருப்பாயி ஆகியோருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது லத்தீப்பை பாலமுருகன் தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதில், படுகாயம் அடைந்த லத்தீப் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் லத்தீப் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், மாடத்தி, பெருமாள், கருப்பாயி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதேபோல் பாலமுருகன் தரப்பில், லத்தீப் மற்றும் அவரது உறவினர் முகமது அலி (65) ஆகியோர் சேர்ந்து தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தங்களுக்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் லத்தீப், முகமது அலி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.