தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது

நாங்குநோியில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-12 20:04 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 28). நாங்குநேரி அருகே மஞ்சன்குளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் நாங்குநேரி நம்பிநகரில் உள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றனர். அப்போது அங்கிருந்த டீக்கடை உரிமையாளரான ராமையாவின் செல்போன் திருட்டு போனது.

இதுகுறித்து அவர் நாங்குநேரி போலீசில் புகார் அளித்ததும், செல்போன் சிக்னலை பின்தொடர்ந்து போலீசார் சென்றனர். அப்போது நாங்குநேரி கிருஷ்ணம்புதூர் அருகில் உள்ள குளத்துகரையில் செல்போன் இருப்பதாக சிக்னல் காண்பித்தது. உடனே போலீசார் அங்கு சென்றபோது, செல்வராஜ் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் தப்பியோடி வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தன்னை முன்விரோதம் காரணமாக மணிகண்டன் அரிவாளால் வெட்டியதாகவும், இதற்கு சின்னத்துரை (28), பொன்ராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் செல்வராஜ் தெரிவித்தார். ராமையாவின் செல்போனும் அங்கிருந்து மீட்கப்பட்டது.

காயமடைந்த செல்வராஜை நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், சின்னத்துரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பொன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்