பெட்ரோல் நிலைய ஊழியருக்கு அரிவாள் வெட்டு
முக்கூடல் அருகே பெட்ரோல் நிலைய ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
முக்கூடல்:
முக்கூடல் சிங்கம்பாறை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த ஜூலை 18-ந் தேதி பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் வாலிபர்கள் தகராறு செய்து உரிமையாளர் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டினர். இந்த வழக்கில் சீதபற்பநல்லூரைச் சேர்ந்த விஜய் (23), கருத்தப்பாண்டி (30), ரங்கசாமி (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் நண்பரான அரிகேசவநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் முப்புடாதி என்ற குமார், இதே பெட்ரோல் நிலையத்தில் பணி செய்து வந்து பின்னர் வேலையை விட்டு நின்று விட்டாராம். இந்நிலையில் நேற்று பெட்ரோல் நிலையத்துக்கு தனது நண்பர்களுடன் வந்த முப்புடாதி, பெட்ரோல் நிலையத்தில் பணியில் இருந்த ஓடைமறிச்சான் பகுதியைச் சேர்ந்த வேணி ராஜ் (28) என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி விட்டனராம். இதில் காயமடைந்த வேணிராஜ் முக்கூடல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முப்புடாதி உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.