காதலி வீட்டில் சிற்ப கலைஞர் மர்ம சாவு

காதலி வீட்டில் சிற்ப கலைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Update: 2023-02-21 18:45 GMT

பனவடலிசத்திரம்:

காதலி வீட்டில் சிற்ப கலைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சிற்ப கலைஞர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). சிற்ப கலைஞரான இவர் உள்பட 12 பேர் ஒரு குழுவாக நெல்லை அருகே உள்ள மேலஇலந்தைகுளம் கிராமத்தில் கோவிலில் சிற்ப வேலை செய்வதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்தனர்.

அவர்கள் அங்குள்ள கோவிலில் 6 மாதம் தங்கி வேலைகளை செய்தனர்.

இளம்பெண்ணுடன் காதல்

அப்போது, விக்னேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் கோவிலில் சிற்ப வேலைகள் முடிந்ததும், விக்னேஷ் தனது ஊருக்கு சென்றுவிட்டார். ஆனால் தொடர்ந்து 2 பேரும் செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்திற்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

தற்கொலை மிரட்டல்

இதற்கிடையே, இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விக்னேஷ் வற்புறுத்தி வந்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

தொடர்ந்து அந்த பெண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு பேசிய விக்னேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உனது வீட்டின் முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தூக்கில் பிணம்

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து தனது தாயாரிடம் கூறினார். அவர்கள் 2 ேபரும் நேற்று முன்தினம் இரவில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

நள்ளிரவில் அங்கு வந்த விக்னேஷ் வீடு பூட்டிக் கிடப்பதை பார்த்து வேதனை அடைந்தார். பின்னர் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே சென்றதாக தெரிகிறது.

நேற்று காலையில் இளம்பெண் தனது தாயாருடன் வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது, அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. வீட்டில் விக்னேஷ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். பின்னர் 2 பேரும் அவரது உடலை கீழே இறக்கி உள்ளனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து உடனடியாக தேவர்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்